பொசன் பூரணை தினத்தன்று புத்தளம் – சாலியவெவ பகுதியில் புகையிலையுடன் கூடிய வெற்றிலைச் சுருள்களை தானமாக வழங்கிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இந்தத் திடீர்ச் சோதனையை மேற்கொண்டனர்.
2006ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் 37(1) அத்தியாயத்தின் கீழ், தானசாலைகளில் இலவசமாகப் புகையிலை வழங்குவது சட்டவிரோதமானது என்பதையும், இந்தத் தானசாலை நடத்துவதற்கு அவர் முறையான அனுமதி பெறவில்லை என்பதையும் அதிகாரிகள் குறித்த நபருக்கு விளக்கமளித்தனர்.
இருப்பினும் தனது தவறை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையான முறையில் நடந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிசாரின் உதவியுடன் குறித்த நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 09ஆம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.














