சர்வதேச சந்தையில் இன்று (02) மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1% சரிந்தன.
இதன் மூலம் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்துள்ளன.
போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாண்ட ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈரானும் அமெரிக்காவும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கட்டார் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது.
அதன்படி வியாழன் GMT நேரம் 02:56 நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent futures) விலை பீப்பாய்க்கு 77 சென்ட்கள் அல்லது 1.1% சரிந்து 70.80 டொலர்களாகவும், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை 84 சென்ட்கள் அல்லது 1.2% சரிந்து பீப்பாய்க்கு 67.74 டொலராகவும் இருந்தது.
முந்தைய வர்த்தக அமர்விலும் இவ்விரு முக்கிய மசகு எண்ணெய் வகைகளின் விலைகளும் 1%-க்கும் அதிகமாகச் சரிந்து, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவை எட்டியிருந்தன.
கடல்வழிப் பாதை திறந்திருப்பதாலும் மசகு எண்ணெய் தொடர்ந்து வெளியேற்றப்படுவதாலும், சந்தையில் தேவைக்கு அதிகமான விநியோகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் சந்தைப் பங்கைத் தக்கவைப்பதற்கான போட்டி விலையைக் குறைத்து வருவதாக Haitong Futures நிறுவனம் தனது குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் தங்கள் உற்பத்தி இலக்குகளை மேலும் அதிகரிக்க OPEC+ நாடுகள் ஒப்புக்கொள்ளக்கூடும் என்று புதன்கிழமையன்று தகவல்கள் தெரிவித்தன.













