இலங்கைக்கான தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர், கலாநிதி சிறி வோல்ட் (H.E. Dr. Siri Walt) அவர்கள், நேற்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதற்காக, அவர் தனது பதவிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து, விசேடமாக தொழினுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் துறையில் நிலவும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்தக்கூடிய தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கைத்தொழில் துறையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வியை பலப்படுத்துவதன் மூலம், உழைக்கும் சக்தியின் திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும் என தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, இருதரப்பு நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.
இந்நிகழ்வில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Justine Boillat), குடியேற்ற விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Andrea Kienast), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.











