லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் நேற்று (22) நடந்த ஏழாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியானது, கொழும்பு கேப்ஸ் அணியை ஐந்து ஓட்டங்களினால் வீழ்த்தியது.
தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற கமிந்து மெண்டீஸ் தலைமையிலான கொழும்பு கேப்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களை எடுத்தது.
சமிந்து விக்ரமசிங்க அதிகபடியாக 22 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் கொழும்பு கேப்ஸ் அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஷஹ்னவாஸ் தஹானி ஆகியோர் அதிகபடியாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கேப்ஸ் அணியானது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
அணி சார்பில் அதிகபடியாக கமிந்து மெண்டீஸ் 42 பந்துகளில் 58 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் சார்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், ட்ராவீன் மேத்யூ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதேநேரம் நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியானது ஆறு விக்கெட்டுகளினால் காலே காலன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலே காலன்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியானது 16.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.















