அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றங்கரைப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்தியப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யடியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அத்துறை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.













