நடிகர் அஜித் குமார் தனது 64 ஆவது படம் குறித்த பல மாத கால ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘டேர் டெவில்’ (Dare Devil) என்ற தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் வெளியீடுகளில் ஒன்றாக அமைந்த ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) படத்தின் வெற்றிக்குப் பின்னர், அஜித் குமார் மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார்.
அஜித் தனது மோட்டார் பந்தய வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்ததால், தனது அடுத்த நடிப்புத் திட்டம் குறித்த விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார்.
பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படம், அஜித் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணியின் மற்றொரு கூட்டணியாகவும் அமைகிறது.
படக்குழுவினர் படத்தின் தலைப்பை வெளியிட்டிருந்தாலும், ‘AK64’ குறித்த பல விவரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அஜித் குமாரின் பந்தய முயற்சிகள் குறித்த ‘கிளாடியேட்டர்ஸ்’ (Gladiators) எனும் புதிய பந்தய ஆவணப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘மதராசபட்டினம்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் இப்படத்தை இயக்குகிறார்.
அஜித்தின் மனைவியான ஷாலினி அஜித் குமார், ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன்’ (Golden Trophy Film Production) நிறுவனத்தின் கீழ் வரவிருக்கும் ஆவணப்படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் பந்தயப் பணிகளுக்கு மத்தியிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆவணப்படத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள பந்தயத் திடல்கள் உட்பட பல்வேறு சர்வதேச பந்தயத் திடல்களில் நடைபெற்ற பந்தயங்களின் பிரத்யேகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அஜித் குமார் தனது நடிப்புத் தொழிலுடன் சேர்த்து, பல ஆண்டுகளாகத் தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் (motorsport) துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.
சர்வதேச அளவிலான ‘எண்டுரன்ஸ்’ (endurance) மற்றும் ‘ஸ்பிரிண்ட்’ (sprint) பந்தயங்களில் பங்கேற்கும் ‘அஜித் குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) என்ற அணியின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் இவராவார்.
2024-ஆம் ஆண்டில், அஜித் தனது பந்தய நடவடிக்கைகளை முறைப்படுத்தி, சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















