இலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காளு மற்றும் மகாவலி ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலேயே அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (11) காலை தெரிவித்தார்.
அப்பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு சுமார் 20 மில்லி மீட்டராக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று (10) காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை வீழ்ச்சு பதிவாகியிருந்தது.
இருப்பினும், இப்பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு 10 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவே பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வெள்ள அபாயம் ஏதுமில்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.







