கைக்குண்டுத் தாக்குதல் மூலம் இரட்டைக் கொலை செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2026.09.11 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு, இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்ததுடன், அவர்களது தந்தைக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மேல் மாகாணம் தெற்கு பிராந்திய குற்றப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த குற்றத்தை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கிய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் 2026.09.17 ஆம் திகதி ரிதிமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த குற்றத்திற்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கிய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில், 11 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குறித்த குற்றத்தை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றுடன், குறித்த இரண்டு சந்தேகநபர்களும் 2026.09.25 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என்பதுடன், பிலியந்தலை மற்றும் கஹதுடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாணம் தெற்கு பிராந்திய குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















