சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்காண்டு கால வேலைத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் அதிகரித்துள்ள போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியின் ஆசிய வர்த்தக திட்டத்திற்கு அளித்த பேட்டியில், IMF திட்டத்தின் அடுத்த மறுஆய்வு இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.
அந்த மீளாய்வின் வெற்றிகரமான முடிவின் பின்னர், நான்கு வருட விரிவாக்கப்பட்ட கடன் வசதி (EFF) திட்டம் அடுத்த வருடத்தின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரை, IMF நிறைவேற்று வாரியம் கடந்த மே மாதம் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை கூட்டாக நிறைவு செய்தது, இதன் கீழ் இலங்கைக்கு கிட்டத்தட்ட 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளது.
2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது.
அங்கு, இலங்கை பல நிதி, நாணயக் கொள்கை, ஆட்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.
உலகளாவிய பொருளாதார சூழலில் சவால்கள் மற்றும் பொருளாதாரத்தில் பல்வேறு வெளி மற்றும் உள்நாட்டு தாக்கங்கள் இருந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது திட்டமிட்டபடி நடைபெறுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.












