இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தங்கள் அரசப் பொறுப்புகளிலிருந்து விலகி அமெரிக்காவுக்குச் சென்று ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த மாதம் மீண்டும் பிரிட்டனுக்குக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் புதன்கிழமை (19) செய்தி வெளியிட்டுள்ளன.
சசெக்ஸ் கோமகனும் கோமகியும், தங்களின் 7 வயது இளவரசர் ஆர்ச்சி மற்றும் 5 வயது இளவரசி லில்லிபெட் ஆகியோருடன் நீண்ட காலத்திற்காக கலிபோர்னியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்கின்றனர் என்றும், செப்டம்பர் மாதம் அக்குழந்தைகள் அங்குள்ள பாடசாலைகளில் சேருவார்கள் என்றும் ‘People‘ இதழும், பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘The Telegraph ‘உம் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹரியின் செய்தித் தொடர்பாளரோ அல்லது பக்கிங்ஹாம் அரண்மனையோ இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், அந்தத் தம்பதியினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தின.
‘தி டெலிகிராப்’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்தத் தம்பதியினர் அரச வசிப்பிடம் எதிலும் வசிக்கப்போவதில்லை.
2020 மார்ச்சில் அவர்கள் வெளியேறியபோது மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே, அவர்கள் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொள்ளாத உறுப்பினர்களாகவே நீடிப்பார்கள்.
ஹாரி 2018 இல் வின்ட்சர் கோட்டையில் நடைபெற்ற விழாவில் மேகன் மார்க்கலைத் திருமணம் செய்துகொண்டார்.
கறுப்பினத் தாயைக் கொண்ட முன்னாள் நடிகையான மேகனுடனான இந்தத் திருமணம், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரச நிறுவனத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடனான அவர்களின் உறவில் விரிசல்கள் ஏற்பட அதிக காலம் ஆகவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 2020 மார்ச்சில் அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வப் பணிகளிலிருந்து விலகி அமெரிக்காவிற்குக் குடிபெயரப்போவதாக அறிவித்தனர்.
அவர்கள் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவுக்கு அருகிலுள்ள வசதிபடைத்தோர் வசிக்கும் கடற்கரையோரப் பகுதியான மான்டெசிட்டோவில் குடியேறினர்.
ஊடகத் தகவல்களின்படி, 16 படுக்கையறைகளைக் கொண்ட அவர்களது வீட்டின் 2020-ஆம் ஆண்டு கொள்முதல் விலை 14.7 மில்லியன் டொலர்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













