ஈரப்பத மண்டலத்தில் உள்ள நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சீராக இருந்தாலும், வறண்ட மண்டலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது.
இதனால் இலங்கையின் 74 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு அவற்றின் கொள்ளளவில் 36 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் சூரிய பண்டார எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர்,
ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள சில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ஏற்கனவே 30 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
‘எல் நினோ’ (El Niño) எனும் காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு நிலைமை மோசமடைந்துள்ளது.
இது வழக்கமான ஆகஸ்ட் மாத வறண்ட காலநிலையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
கடும் வெப்பம் நீரின் ஆவியாதல் வேகத்தை அதிகரித்துள்ளதால், கிடைக்கக்கூடிய நீரின் அளவு மேலும் குறைந்துள்ளது.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருந்தாலும், சில பகுதிகளில் விவசாயத்திற்கான நீர் ஒதுக்கீடு ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதனால் விவசாயத் தேவைக்காக நீர் விடுவிப்பது மேலும் கடினமாகிவிடும்.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வாழ்வதுமே இச்சவாலை எதிர்கொள்வதற்கான ஒரே வழி.
அதேநேரம், தற்போதைய வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் சூழலில் காட்டுத்தீ வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, கடுமையான விழிப்புடன் இருப்பதுடன், எதிர்காலக் காலநிலை மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில் ‘எல் நினோ’ (El Niño) குறித்த முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை உணருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.














