அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், பால்க்லாந்து தீவுகள் தமது நாட்டுக்குச் சொந்தமானவை என மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், அவற்றை “மீட்டெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தீவுகளை மீட்பதற்கு இனி வேறு வழியில்லை என்றும், மாற்றத்திற்கான சூழல் தமக்கு சாதகமாக உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பால்க்லாந்து தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாகவும் மிலெய் அறிவித்துள்ளார். குறிப்பாக, எதிர்காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள Sea Lion திட்டத்தை அர்ஜென்டினாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனுடன், தெற்கு அர்ஜென்டினாவின் Tierra del Fuego பகுதியில் கடற்படைத் தளத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மிலெய் அறிவித்துள்ளார்.
இதற்கு கடுமையாக பதிலளித்துள்ள பிரித்தானியா, பால்க்லாந்து தீவுகள் பிரித்தானியாவுக்குச் சொந்தமானவை என்றும், அங்கு வசிக்கும் மக்களின் சுயநிர்ணய உரிமையே தமது நிலைப்பாட்டின் அடிப்படை என்றும் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், தீவுகள் தொடர்பான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு “முழுமையானதும் அசைக்க முடியாததும்” எனக் கூறியுள்ளார்.
1982ஆம் ஆண்டு பிரித்தானியா–அர்ஜென்டினா போரைத் தொடர்ந்து நீடித்து வரும் இந்த விவகாரம், தற்போது எண்ணெய் வளங்கள் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.















