இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் போது, தென்மேற்கு டெல்லியில் உள்ள அந்த ஐந்து மாடி கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மீன்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய நேரில் கண்ட சாட்சிகள், உள்ளே சுமார் 24 முதல் 48 பேர் வரை இருந்ததாகத் தெரிவித்தனர்; எனினும், அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில், ஐந்து கல்லூரிகளைக் கொண்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள அந்த கட்டிடம், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1:30 மணிக்கு (08:00 GMT) இடிந்து விழுந்தது.
அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள்; ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் ஏதும் இல்லாததால், கட்டிடம் இடிந்து விழுந்தபோது அவர்களில் பலர் தங்கள் அறைகளில் இருந்ததாகக் கருதப்படுகிறது.














