மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில், குறித்த கப்பல் சுரபயாவிலிருந்து பன்ஜார்மாசின் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்தே பிரதான போக்குவரத்து முறையாகும்.
விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருப்பதால், பொதுமக்கள் மலிவான கடல்வழிப் பாதைகளை அதிகளவில் நாடி வருகின்றனர்.
இருப்பினும், நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்புத் தரங்களும் விதிமுறைகளும் முறையாகச் செயல்படுத்தப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.















