தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தலைமையில் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணி நடத்த முயன்ற சுமார் 1,000 போராட்டக்காரர்கள் இன்று (09) தலைநகர் முழுவதும் தடுத்து நிறுத்தப்பட்டதாக டெல்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த பின்னரும், டெல்லி காவல்துறை போராட்டக்காரர்களைத் தடுப்புக் காவலில் எடுப்பதைத் தொடர்ந்தது.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்ற CJP செயல்பாட்டாளர் அபிஜீத் டிப்கே, டெல்லி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கியபோது காவல்துறையினர் தன்னையும் தனது சகாக்களையும் தடுத்து நிறுத்தியதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அந்தக் காணொளியில், காவலர்கள் விமானத்திற்குள் நுழைந்து தங்களைக் கைது செய்ய முயன்றதாக டிப்கே குற்றம் சாட்டுவது தெரியவருகிறது.
CJP தனது சட்டப் பிரிவுத் தலைவரான ரத்னா சிங் தொடர்பான காணொளி ஒன்றையும் பகிர்ந்தது; அதில், அவர் தனது காரில் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியதாக அவர் கூறியிருந்தார்.
அந்தக் காணொளியில், காவலர்கள் காலை வேளையில் தனது வீட்டிற்கு வந்து, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதையும் வழங்காமலேயே தன்னைத் தடுத்து வைக்க முயன்றதாக சிங் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கான அழைப்பை CJP அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டெல்லிக்குள் நுழையும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, 46 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, புது டெல்லி மாவட்டம் 20 செயல்பாட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி தடுத்து வைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

















