தேசிய அணி முகாமிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் (FPF) கிறிஸ்டியானோ ரொனால்டோவை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாடு காரணமாக, டென்மார்க் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டிக்கு முன்னதாக 41 வயதான ரொனால்டோ அணியிலிருந்து விலகினார்.
நோர்வேக்கு எதிரான ஆட்டத்தில் தான் மாற்று ஆட்டக்காரராக அமரவைக்கப்பட்ட நிலையில், விளையாடும் நேரம் குறித்த வாக்குறுதிகளை ஜீசஸ் மீறியதாக ரொனால்டோ குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, முகாமிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொண்ட ரொனால்டோ, தனது சக வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், தனது செயலுக்காகத் தன்னைத் தண்டிக்குமாறு கூட்டமைப்பைக் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, ரொனால்டோவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அதன் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் FPF சனிக்கிழமை (10) உறுதிப்படுத்தியது.
2026 ஒக்டோபர் 9 அன்று தொழில்முறை சாராத பிரிவு (Non-Professional Section) எடுத்த முடிவைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் “அவசரமானது” எனக் குறிப்பிடப்பட்டு கூடுதல் இடைநீக்க நடவடிக்கை விதிக்கப்படுவதற்கு முன்னதாக, ரொனால்டோ ஆரம்பத்தில் தற்காலிக இடைநீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக FPF மேலும் தெரிவித்தது.
இறுதித் தண்டனை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அதேவேளையில், விசாரணை முடியும் வரை ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவரங்கள் இரகசியமாகவே வைக்கப்படும்.
தமக்கு விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த ரொனால்டோ, தொடர்ந்து போர்த்துக்கல் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் இந்த வாரத் தொடக்கத்தில் வலியுறுத்திக் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.














