இன்றைய யானைகளைவிட மிகப்பெரிய உருவத்தைக் கொண்டிருந்த ஸ்டெகோடான் (Stegodon) எனப்படும் யானை இனம், இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்திருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் காடுகள், புல்வெளிகள் மற்றும் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் இந்த யானைகள் வாழ்ந்துள்ளன. இவை ‘ஸ்டெகோடான் நமாடிகஸ்’ (Stegodon namadicus) எனப்படும் உயிரியல் பிரிவைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது வாழும் யானைகளைவிட மிகப்பெரிய உடலமைப்பையும், நீண்ட வளைந்த தந்தங்களையும், பெரிய கடைவாய்ப் பற்களையும் இவை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இவற்றின் கடைவாய்ப் பற்கள் கூரை போன்ற முகடு அமைப்பைக் கொண்டிருந்தமை புதைபடிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஸ்டெகோடான் யானைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்த யானை இனம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அழிந்திருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பருவநிலை மாற்றம், காடுகள் மற்றும் புல்வெளிகளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்கள், உணவு மற்றும் வாழிடப் பற்றாக்குறை, மனிதர்களின் வேட்டை உள்ளிட்ட காரணங்களால் இந்த யானை இனம் அழிவைச் சந்தித்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பல இலட்சம் ஆண்டுகளாக இடம்பெற்ற பரிணாம வளர்ச்சியில் பல்வேறு தும்பிக்கை கொண்ட விலங்கு இனங்கள் தோன்றி வாழ்ந்து அழிந்துள்ள நிலையில், ஸ்டெகோடான் யானைகள் அவற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இனமாகக் கருதப்படுகின்றன.

















