தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ‘டெல்லி சலோ’ போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது. அதற்குப் பதிலாக, அரசியலமைப்பு தினமான நவம்பர் 26ஆம் திகதி அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ‘அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பேரணி’ நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்குகளைப் பாதுகாப்போம், நாட்டைப் பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தின் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ‘டெல்லி சலோ’ போராட்டம் பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பிரமாண்டமான பேரணிகளை நடத்துமாறு அனைத்து மாநில காங்கிரஸ் குழுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் முதலாம் திகதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதன்போது, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்தை அடிமட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில், ‘வாக்குரிமைப் பாதுகாவலர்’ என்ற புதிய முன்னெடுப்பையும் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தது ஒருவரை பயிற்சியளிக்கப்பட்ட வாக்குரிமைப் பாதுகாவலராக நவம்பர் 21ஆம் திகதிக்குள் நியமிக்குமாறு பிராந்தியத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் நவம்பர் 22ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களது விபரங்களைச் சரிபார்த்து, அதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.iamvoterakshak.in என்ற இணையத்தளத்தில் தினமும் பதிவேற்றம் செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை கிராம மற்றும் பிராந்திய மட்டங்களில் மக்கள் சபைகள் நடத்தப்படவுள்ளன.
இதில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர்களும் இதில் நேரடியாகக் கலந்துகொண்டு, வாக்குரிமையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவுள்ளனர்.
















