அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறுகளால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு வலையமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனமான L3Harris நிறுவியிருக்கக்கூடிய பழுதடைந்த ரௌட்டர் ஆகியவை இந்தத் தடைக்குக் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (14) தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை நாடு தழுவிய விமானப் போக்குவரத்துத் தடையை FAA நீக்கியிருந்த போதிலும், அதன் தாக்கம் தொடர்ந்து நீடித்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightAware இணையத்தளத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை மாலை 6.45 மணி (ET) வரையான நிலவரப்படி, 6,150-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 7,300-க்கும் அதிகமான விமானப் பயணங்கள் தாமதமடைந்துள்ளன.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த 530-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமானப் போக்குவரத்து முடக்கம், 2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் நாடு தழுவிய ரீதியில் விமானப் போக்குவரத்து நீண்ட நேரம் நிறுத்தப்பட்ட மிகப்பெரிய சம்பவமாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.













