பிரேக் செயலிழந்த நிலையில் வந்தே பாரத் ரயில் 463 கிலோமீற்றர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி, ஜார்கண்ட் மாநிலத்தின் ஹதியா ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதிக்கு வந்தே பாரத் ரயிலைக் கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டது. பயணிகள் இல்லாத குறித்த ரயிலை, சரக்கு ரயிலின் எஞ்சின் மூலம் இழுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சரக்கு ரயிலின் எஞ்சின் சாரதி, ஆரம்பத்தில் வந்தே பாரத் ரயிலின் பிரேக் கட்டமைப்பைப் பரிசோதித்துள்ளார். இதன்போது, பிரேக் செயலிழந்த நிலையில் இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார். இது தொடர்பில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
எனினும், ரயிலின் பிரேக் கட்டமைப்பு சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், ரயிலைக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கிலோமீற்றர் தொலைவுக்கு வந்தே பாரத் ரயிலை சரக்கு ரயிலின் எஞ்சின் மூலம் சாரதி இழுத்துச் சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி பகுதியில் ரயிலை நிறுத்திய அவர், அதற்கு மேல் ரயிலைக் கொண்டு செல்ல முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரயில்வேயின் மூத்த அதிகாரிகளுக்கு அவர் எழுத்துமூல முறைப்பாட்டையும் சமர்ப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் உயர்மட்ட விசாரணையை முன்னெடுத்து வருகிறது. தவறிழைத்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















