உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளுக்கான மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் நிதி வசதிகளின் கீழ் அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கடந்த 2025.10.13 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிப் பிரிவின் கீழ் 8,660 குடும்பங்களுக்கு ஏற்கனவே மூலதன நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்தத் திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், உலக வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த 4,900 குடும்பங்களுக்கு மூலதன நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 6,600 குடும்பங்களுக்கு மூலதன நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், கருத்திட்டத்தின் தரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒவ்வொரு பயனாளர் குடும்பத்துக்கும் வழங்கும் நிதியுதவியை அதிகரிக்கவும், மொத்தப் பயனாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் உலக வங்கி சம்மதித்துள்ளது.
அதற்கமைய, உலக வங்கியின் நிதியுதவி பெறும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் கீழ் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்ட பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 10,975 இலிருந்து 11,500 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன், தற்பொழுது ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக வழங்கப்படும் ரூ. 150,000 மூலதன நிதியானது, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ. 200,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.














