திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை (24) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆயிரம் மீற்றர் காடாத் துணி, மாட வீதியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மகா தீபத்தை தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி, கோயில் மற்றும் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பரணி தீபத்துக்கு 5,500 பக்தர்களும், மகா தீபத்துக்கு 8,500 பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், திருவிழாவையொட்டி 15,500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதற்கிடையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு 1,500 அனுமதிச் சீட்டுகளும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1,500 அனுமதிச் சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு இணையவழி அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கான இணைப்பு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

















