ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தங்களது தூக்கத்தைப் பாதிப்பதாக அமெரிக்க இளைஞர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் கருதுவதாக, பியூ ஆய்வு மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2026ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 18 முதல் 29 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 62 வீதமானோர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களுக்குக் கிடைக்கும் தூக்கத்தின் அளவைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி, ஒட்டுமொத்த அமெரிக்கப் பெரியவர்களில் 41 வீதமானோர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களது தூக்கத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, 5 வீதமானோர் மாத்திரமே ஸ்மார்ட்போன்கள் தூக்கத்திற்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் பாதிப் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களது தூக்கத்தைப் பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், அமெரிக்கப் பெரியவர்களில் 53 வீதமானோர் தாங்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கருதுகின்றனர்.
இந்த எண்ணிக்கை 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே 70 வீதமாகக் காணப்படுகிறது.
இதேவேளை, 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 64 வீதமானோரும், 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் 49 வீதமானோரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 வீதமானோரும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
திரை நேரம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வருகின்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சித்ததாக 45 வீதமானோர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 46 வீதமானோர் அவ்வாறான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பயன்பாட்டைக் குறைக்க முயற்சித்தவர்களில் 25 வீதமானோர் தங்களது முயற்சி மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், 52 வீதமானோர் ஓரளவு வெற்றியளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கப் பெரியவர்களில் நான்கில் ஒருவர் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 30 வயதுக்குட்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை 42 வீதமாகவும், 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 33 வீதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்களது வேலைத்திறனைப் பாதிப்பதாக 34 வீதமான அமெரிக்கர்களும், மனநிலையைப் பாதிப்பதாக 22 வீதமானோரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஸ்மார்ட்போன்களின் நன்மைகளையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அவற்றின் மூலம் உலக நடப்புகளை அறிந்துகொள்ள முடிவதாக 73 வீதமானோரும், ஏனையவர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவதாக 51 வீதமானோரும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்புக்கும், அன்றாடத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இன்றியமையாத சாதனங்களாக மாறியுள்ள போதிலும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு குறிப்பாக இளம் தலைமுறையினரின் தூக்கம், மனநிலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்த கவலை அதிகரித்து வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

















