சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.
மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்தா பவர், கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை ஒன்றிணைந்ததும், சுபீட்சமானதும், பாதுகாப்பானதுமான சுதந்திர இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் பூரண ஆதரவையும் அவர் இதன்போது உறுதிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















