ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவைப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையை மேற்கோளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாதாந்தம் ஊதியம் பெறுபவர்களில் 70 விகிதமானோர் 62,000க்கும் குறைவான சம்பளமே பெறுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறுமை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் போசாக்குக் குறைபாடு தொடர்பான யுனிசெப் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் வாதிடுவது சரியானதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகள் தொடர்வதாக சுட்டிக்காட்டிய எரான் விக்கிரமரத்ன, சேதனை பசளை இறக்குமதி என்ற போர்வையில் நாடு 7.6 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 8 அன்று டொலர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று அறிவித்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் உட்பட திருட்டு மற்றும் மோசடிக்கு காரணமானவர்கள் தொடர்பாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.