கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பல பாரிய குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
மிரிஹானில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 74 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவினர் போதிய தகவல்களை வழங்கிய போதிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதனை தடுக்குமாறு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை குழுவால் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சாட்சியங்களின்படி, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் புலனாய்வு அமைப்புகளின் நடத்தையில் மூன்று பாரிய குறைபாடுகளை விசாரணைக் குழு அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.