இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரியான்’. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் தனது சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதில், ‘நேற்று அவள் இருந்தால்’, ‘கொம்பன் சூறா’, ‘சோனா பரியா’ ‘இன்னும் கொஞ்ச நேரம்’ போன்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில், ‘மரியான்’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், பார்வதி, பரத்பாலா ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் மூலம் வந்து பதிவு செய்திருந்தனர். இந்த லைவ்விற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கொண்டாடினர். இந்த லைவ் வீடியோவிற்கு முன்பு மரியான் புகைப்படத்தை பகிர்ந்து இன்று லைவ் போலாமா நமது சிந்தனனைகளை பகிர்ந்துகொள்ள என ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




















