கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால் இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா தெரிவித்துள்ளார்.
கல்முனை லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகரித்த கைத்தொலைபேசிப் பாவனையால் எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.
எனவே தேவைக்கு கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும்.
கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப்பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது. அன்றாட ஊடக செய்திகளில் கைத்தொலைபேசி குற்றங்கள் அதிகரிப்பு என்ற செய்தியே இடம்பிடித்துள்ளது.
இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். இன்று நாம் வாழும் உலகம் முழுவதும் கைத்தொலைபேசி பாவனைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது.
நாம் எதைச் செய்வதென்றாலும் எம் தேடல் கைத்தொலைபேசியில் தங்கி உள்ளது. இப் பழக்கம் தற்போது சிறுவர் முதல் முதியோர்வரையும் ஆட்கொண்டு விட்டது.
இதனால் அனைவரதும் சிந்திக்கும் ஆற்றல் வாசிப்புத்திறன் புதுமைகள் படைக்கும் திறன் என பல திறன்களை செய்யமுடியாமல் ரோபோக்கள் போல் இயங்குகின்றனர்.
ஆன்மீகம் இல்லாமல் போகின்றது. நல்லொழுக்கம் விழுமியம் குறைவடைகின்றது. எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.
எனவே தேவைக்கு கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.