மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாகக் கேள்விக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை 2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழந்ததுடன், மனித உரிமைகள்சார் மறுசீரமைப்புக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு அமைவாக மீண்டும் 2017 ஆம் ஆண்டில் அச்சலுகையை மீளப் பெறப்பட்டது.
இருப்பினும் அந்த உத்தரவுகள் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாகவும், பகிரங்கமாகவும் கரிசனைகளை வெளியிட்டு வந்தது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்க வைத்துக்கொள்ள இலங்கை செயற்றிறன்மிக்க முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













