இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் (Celebi Aviation) நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான மனித வளங்களை துருக்கி வழங்கியமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,பாகிஸ்தான் பிரதமரை ‘சகோதரர்’ எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறியமையினாலும் துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்கிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டினாலும் அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது.
அதன்படி, துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையின், ‘சிவில் விமான பாதுகாப்பு பணியகம்’ அதிரடியாக ரத்து செய்துள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸெலெபி ஏவியேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரை இருக்கின்ற நிலையில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக ஸெலெபி ஏவியேஷன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















