ஒபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் விட சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அதன்பிறகு, பல நாடுகள் இந்திய பாதுகாப்பு உபகரணங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.
அந்தவகையில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கும், நைப் லிமிட்டெட் (Nibe Limited) நிறுவனம் தற்போது இஸ்ரேலின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு USD 17.52 மில்லியன், அதாவது இந்திய பெறுமதியில் சுமார் ₹150 கோடியாகும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், நைப் லிமிட்டெட், 300 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கக்கூடிய யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் Make in India மற்றும் Aatmanirbhar Bharat என்ற இந்தியாவின் தன்னிறைவு கனவிற்கு பெரிய ஊக்கமாக உள்ளது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














