ஶ்ரீபுர – சிங்கபுர வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கையில் பயணித்தவரும் ஶ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஓட்டுநர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
சம்பவத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே உயிரிழந்ததாகவும், காயமடைந்த நபர் 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பெல்மடுல்ல – நோனாகம வீதியின் கொஸ்வெடிய பிரதேசத்தில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அல்பிடிய, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் , கண்டி – அப்லன்ட் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கும்புர பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பரகொட, அலுதெணிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும், விபத்து தொடர்பில் 41 வயதுடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














