ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் ( Volker_Turk ) மற்றும் அவரது குழுவினர் புதன்கிழமை (25) அன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள வோல்கர் டர்க், புதன்கிழமை (25)அன்று காலை திருகோணமலையில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களை சந்தித்த பின்னர் ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது மீள்குடியேற்றம், காணாமல் போனோர், மனித உரிமைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலப் பிரச்சினை குறித்து அவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எடுத்த முடிவுகள் மற்றும் அதன் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையில் ஐக்கிய நாடு. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche மற்றும் குழுவினர், கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் தலங்கம, மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















