பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
முக்கியமாக போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாழ்வாதாரச் செலவுகளின் அதிகரிப்பை எதிர்கொண்டு, தங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு மற்றும் வேலை நிலைத்தன்மை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு, நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளும் இடையூறுகளை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக ரயில்வே மற்றும் பஸ் பணியாளர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனுடன், தேசிய சுகாதார சேவையில் (NHS) பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பள உயர்வுக்கான கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மருத்துவ சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பொது மக்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பிரித்தானிய அரசு, நீண்டகாலமாக நிலவும் தொழிற்சங்க கோரிக்கைகளை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இன்னும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களைத் தொடர முடிவு செய்துள்ளன.
இதனால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியிருப்பதோடு, நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளும் தடுமாற்றமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














