தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர், கஹதுடுவவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
தெஹிவளை ரயில் நிலையம் அருகே கடந்த 18 ஆம் திகதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டை, திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் “கொஸ் மல்லி” மேற்கொண்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுதத் குமார, குறித்த பகுதியில் மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதலின் மற்றொரு விளைவாகக் கருதப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 46 வயதுடைய சுதத் குமார தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் கஹதுடுவ, பலகம பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டை இன்று அதிகாலை 4:30 மணியளவில் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேக நபர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
அதேநேரம், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரி ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.














