2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது.
அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி போராளிகள் இரத்து செய்துள்ளதாக கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் திங்கட்கிழமை (28) அறிவித்தது.
இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என்று அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கண்ட தகவல் வந்துள்ளது.
நிமிஷாவின் மரணதண்டனை முதலில் ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கிராண்ட் முப்தி முஸ்லியார் ஏமன் அதிகாரிகளிடம் கருணை கோரி நேரடியாக முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்பு நிறுத்தப்பட்டது.
குற்றப் பின்னணி எனன்?
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015 இல் அரசு செவிலியர் பணியை இராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, ஜூலை 16 ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு 8.6 கோடி இந்திய ரூபா குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.
கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.














