பிரித்தானிய அரசு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித் தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சர் யவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”குறித்த நிதித் தொகையானது தேசிய குற்றவியல் முகமைக்கு (National Crime Agency) 300 புதிய அதிகாரிகளை நியமிக்கவும், ஆட் கடத்தல் குழுக்களை கண்டறிய உதவும் புதிய தொழில்நுட்பங்களைக் கொள்வனவு செய்யவும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட் கடத்தலை வேரறுக்கும் முயற்சியாக இது செயல்படும்,” எனவும் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு சமூக ஊடகங்களில் சட்டவிரோத குடியேற்றத்துக்கான விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கைகள் இதன் மூலம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புகலிடக் கோரிக்கை மனு முறைகளை விரைவுபடுத்தும் விதமாக, அக்டோபர் மாதத்தில் புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஒரு புகலிடக் கோரிக்கை மனு முறையீட்டின் தீர்ப்பு பெற சுமார் 54 வாரங்கள் ஆகிறது எனவும் மார்ச் 2025 நிலவரப்படி, 50,000க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்ப்பிற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















