2025ம் ஆண்டிற்கான ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஆர்ஜென்டினா அணிக்கெதிரான போட்டியில் நியுசிலாந்து ரக்பி அணி 41- 24 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
4 முன்னனி நாடுகளுக்கிடையில் நடைபெறும் ரக்பி சம்பியன்ஷிப் தொடரானது இம்முறை ஆர்ஜென்டினா தலைமையேற்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் ஒரு முறை தனது சொந்த மண்ணில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். இதில் கூடுதல் புள்ளிகளை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் அந்தவகையில் 16ம் திகதி தொடங்கிய குறித்த போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியுசிலாந்து மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய நிலையில் நியுநிலாந்து அணியின் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது.போட்டியின் 9வது நிமிடத்தில் சிறப்பான ட்ரை மூலம் நியுசிலாந்து அணிக்கு 4 புள்ளிகள் கிடைக்கப்பெற்று 8-0 என்ற நிலையில் அவ்வணி ஆதிக்கத்தை தொடர்ந்தது.
போட்டியின் 16வது நிமிடத்தில் ஒட்டுமொத்த அணி வீரர்களின் பங்களிப்புடன் தனது முதல் புள்ளியை பதிவு செய்தது ஆர்ஜென்டினா அணி. 10-5 என போட்டி தொடர்ந்தது. பின்னர் 17வது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் அல்போனஸ் மேலும் இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் நியுசிலாந்து வீரர்கள் தங்கள புள்ளிகளை அதிகரித்துகொள்ள ஆர்வம் காட்டி சிறப்பாக செயற்பட்டு மேலும் 7 புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். 29வது நிமிடத்தில் நியுசிலாந்து வீரர் விதி மீறலில் ஈடுபட்டதால் ஆர்ஜென்டினா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
அதனை சிறப்பாக பயன்படுத்தி மேலும் 3 புள்ளிகளை பெற்று 17-10 என ஆர்ஜென்டினா அணி தனது புள்ளிகளை பெற்று அதிகரித்துகொள்ள பாடுபட்டது. நியுசிலாந்து அணி அதன் பின்னர் இன்னும் ஆக்ரோஷமாக புள்ளிகளை அதிகரிக்க தொடங்கியது. 29-10 என போட்டியில் அவ்வணி முன்னிலைப்பெற்ற நிலையில் முதல் பாதியில் 31-10 என நியுசிலாந்து அணி முன்னிலைப்பெற்று அசத்தியது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆர்ஜென்டினா அணி புள்ளிகளை அதிகரிக்க தொடங்கியது. 31-17 என ஆர்ஜென்டினா அணி முன்னேறி வந்ததுடன் 59வது நிமிடத்தில் நியுசிலாந்து வீரருக்கு நடுவரினால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் 63வது நிமிடத்தில் போராடி ஆர்ஜென்டினா அணி 24ஆக புள்ளியை அதிகரித்து 31-24 என அருகில் வந்தது. பின்னர் வாய்ப்புக்களை தனதாக்கிய நியுசிலாந்து அணி போட்டியின் இறுதியில் அடுத்தடுத்து இரண்டு ட்ரையர்களையும் சரியாக பயன்படுத்தி 41-24 என தனது முதல் போட்டியில் ஆர்ஜென்டினா அணியை வெற்றிக்கொண்டு போனஸ் புள்ளியையும் பெற்று அசத்தியது இதனால் 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது நியுசிலாந்து அணி.


















