டெல்லியின் துவாரகாவில் அமைந்துள்ள குறைந்தது மூன்று பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் திங்கட்கிழமை (18) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதனால், மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தினர்.
துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பாடசாலை, மாடர்ன் கான்வென்ட் பாடசாலை மற்றும் ஸ்ரீராம் வேர்ல்ட் பாடசாலைகளுக்கு மிரட்டல்கள் வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 7.24 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, டெல்லி பொலிஸார், வெடிகுண்டு செயலிழப்புப் படை மற்றும் மோப்ப நாய் படையைச் சேர்ந்த பல குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தன.
எனினும், இதுவரை விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், பெங்களூருவுடன் சேர்த்து தேசிய தலைநகரில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
ஜூலை 18 அன்று பெங்களூருவில் 40 தனியார் பாடசாலைகளுக்கும், டெல்லியில் 45 தனியார் பாடசாலைகளுக்கும் மிரட்டல்கள் வந்தன.
இருப்பினும், இவற்றுள் பல பின்னர் புரளிகளாக மாறிவிட்டன.
இந்தியாவில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
2024 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது பல பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.


















