இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22ஆம் திகதி அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (26) அவரை பிணையில் விடுதலை செய்ததை அடுத்து, நாட்டில் நிலவி வந்த பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, தனது பதவிக் காலத்தில் 2023 செப்டம்பர் மாதத்தில், ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்குப் பின், தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு ரணிலின் மீது சுமத்தப்பட்டது.

விசாரணையின் போது, ரணிலின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்ட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த 22 ஆம் திகதி காலை அவர் அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தமது சேவை பெறுநரின் உடல்நிலை மற்றும் அவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரினார். இதற்காகப் பல்வேறு காரணங்களையும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்தார்.
ரணில் விக்ரமசிங்க, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் அவருடைய மனைவி ஒரு புற்றுநோயாளி என்றும், அவரைக் கவனித்துக்கொள்ள பிரதிவாதியைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும் சுட்டிக்காட்டிப் பிணை வழங்குமாறும் கோரியிருந்தார்.
இந்நிலையில் விசாரணையின் போது நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிவான் மாலை 5.30 அளவில் அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, இரவில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 22 ஆம் திகதி 10 மணியளவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, நேற்று வரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதவான் அறிவித்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அடிப்படை சட்டமாக உள்ளமையால், சந்தேகநபர் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை இவ்வாறான வழக்கில் கவனத்திற் கொள்ள முடியாது என்றும் நீதவான் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பின்போது பிணை வழங்குவதற்குப் பாரதூரமான காரணங்களே கவனத்திற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட நீதவான், பிரதிவாதியினது மனைவியின் உடல்நிலை இதற்கான காரணமாக அமையாது என்றும் சுட்டிக்காட்டினார்
அத்துடன் பிரதிவாதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு இணங்க, அவர் லண்டன் பயணத்தின்போது பயன்படுத்திய நிதி அரச நிதியல்ல என்பதைப் பிரதிவாதி தரப்பு நிரூபிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நிலையில் இரவு 10 மணியளவில் நீதிவான் பிணைக் கோரிக்கையை நிராகரித்து அவருக்கான விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் காவல்துறை கலகத்தடுப்பு பிரிவினரும் நீதிமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரணில் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், நோய் நிலைமைக் காரணமாகச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்த சிறைச்சாலை மருத்துவர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.

இதனையடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று 26ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது நிலை ஏற்படலாமெனக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்திருந்தார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.அத்துடன், அவரை மூன்று நாட்கள் கட்டாய ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒருவேளை, அவ்வாறு சிகிச்சை அளிக்காவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட ஆபத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரசியல் சூழல்
இதன்போது நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கடும் பதற்றம் நிலவியது. ரணிலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொலிஸார் கலகத் தடுப்பு பிரிவை தயார்நிலையில்வைத்ததோடு, நீதிமன்றத்துக்குச் செல்லும் வீதிகளைத் தற்காலிகமாக மூடினர்.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்லக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சந்தேக நபரைத் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ரணிலுக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் தொடர்ச்சியான விசாரணைகள், நாட்டின் அரசியல் சூழ்நிலையை பெரிதும் பாதிக்கக்கூடும். வரவிருக்கும் காலகட்டத்தில் இந்த வழக்கு இலங்கையின் அரசியல் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related