தலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று (26) இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்திரவினையும் பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை கடந்த 21ஆம் திகதி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அறிவித்தல் அனுப்பப்பட்டும் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அறிவித்தல் கட்சிப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்தே குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















