நமது உடலில் மிக முக்கியமான முதன்மையான உறுப்பு என்றால் அது இதயம் தான். ஆரோக்கியம் சற்று குறைந்தாலும் மீண்டு வருவது கடினமாகும்.
அவ்வாறு முக்கியமான இதயம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய காரணமாக இதய நோய் கருதப்படும் நிலையில், உலக இதய தின அறிவிப்பு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஒவ்வொரு இதயத்துடிப்பும் முக்கியம். எந்த இதயத்துடிப்பையும் முன்கூட்டியே இறக்க விடாதீர்கள்” எனும் கருப்பொருளில் இந்த ஆண்டு இதய தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையில், உலகளவில் இதய நோயால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் தடுக்கக்கூடியவை என்பது வருத்தமளிக்கும் விடயம் என்று இலங்கை இருதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு நேற்று (28) கொழும்பில் உள்ள விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தடுக்கக்கூடிய இதய மரணங்களைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதே உலக இதய தினத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனவும் வைத்திய நிபுணர் இதன்போது வலியுறுத்தினார்.
எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதய நோயாளிகளுக்கு சிகிச்சையினூடே உடற்பயிற்சிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டாலும்
உடற்பயிற்சி குறித்த பயம், சோர்வு போன்றவற்றால் நீண்ட கால ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
அதனால் மருத்துவர்கள் இதய நோய் சிகிச்சையில் உடற்பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்.
உடற்பயிற்சி, நல்ல உணவுமுறை, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் மன அழுத்த செயல்களைத் தவிர்ப்பதுடன், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளும் இதற்கு முக்கியம் என்று வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார்.















