வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை அடையாளம் காண இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து வந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாத்தறை வரை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்ததாகவும், மாத்தறையில் வைத்து வேறொரு நபர் அவருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














