வங்க்ஸியின் புகழ்பெற்ற “பலூனுடன் கூடிய பெண்” அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடியதற்காக லாரி ஃப்ரேசர்(Larry Fraser) என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
(Grove Gallery ) கிரோவ் கேலரியில் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த (Larry Fraser) ஃப்ரேசர் , £270,000 பவுண்ட் பெறுமதியுடைய பலூனுடன் கூடிய பெண் எனும் கலைப்படைப்பைத் திருடியுள்ளார்.
தெரு கலைஞர் ஒருவரின் மிகவும் பிரபலமான கலை ஆக்கங்களில் ஒன்றான இந்த ஓவியம் , கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி இரவு 11 மணியளவில் இங்கிலாந்தில் உள்ள நியூ கேவென்டிஷ் தெருவில் உள்ள ஒரு கேலரியில் இருந்து திருடப்பட்டது.
இந்நிலையில் திருடப்பட்ட ஓவியத்தை குறித்த நபர் வேன் ஒன்றில் ஏற்றுவது cctv கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் முகமூடி அணிந்திருந்த போதிலும், பெருநகர காவல்துறையால் அவர் 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் கலைப்படைப்பு கைப்பற்றப்பட்டு கேலரிக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மேலும், 54 வயதான ஜேம்ஸ் லவ் என்ற இரண்டாவது நபர், கொள்ளையில் தப்பிச் சென்ற ஓட்டுநராக குற்றம் சாட்டப்பட்டதுடன் அவர் இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 49 வயதான லாரி ஃப்ரேசர்(Larry Fraser) முன்னதாக போதைபொருள்கொள்வனவுக்காக வாங்கிய பழைய கடனை செலுத்தவே இவ்வாறு திருட்டில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நேற்றையதினம் அவருக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.















