தேசிய தலைநகர் முழுவதும் காற்றின் தரம் கடுமையான வகையில் மோசமடைந்துள்ளமையினால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அனைத்து வெளிப்புற மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்த டெல்லி பாடசாலைகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய காற்று தர மேலாண்மை ஆணையத்தை (CAQM) உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த உத்தரவு வந்துள்ளது.
டெல்லியில் தற்போதைய காற்றின் தரம் சிறுவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாக ஆணையகம் மேலும் கூறியது.
இந்த வாரம் டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் சரிந்து, வெள்ளிக்கிழமை டெல்லின் காற்று தரக் குறியீடு (AQI) 373 ஆக இருந்தது – இது ஒரு நாளைக்கு சுமார் 10-11 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.
இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்து, விளையாட்டு நிகழ்வுகளை பாதுகாப்பான மாதங்களுக்கு மாற்றுமாறு வலியுறுத்திய ஒரு நாளுக்குப் பின்னர் டெல்லி அரசின் உத்தரவு வந்துள்ளது.














