அரசுமுறைப் பயணமாக மூன்று நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர், ”இஸ்ரேலில் உள்ள தொழில்துறைத் தலைவர்களும், அரச பிரதிநிதிகளும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் , டெல் அவிவ் நகரில் இந்திய-இஸ்ரேல் வர்த்தகர்கள் மாநாட்டிலும் பங்கேற்றார்.
இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார தொழில் துறை அமைச்சர் நிர் பர்கத் தலைமையிலான குழு பங்கேற்றது.
பின்னர், இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறைப்படி தொடங்குவதற்கான வரையறைகளை நிர்ணயித்து கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத்துடன் தான் மிக நீண்ட உரையாடலை நடத்தியதாகவும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தாம் மிக விரிவாக விவாதித்ததாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் இந்தியக் குழு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து அவர் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினார் எனவும் இஸ்ரேலுக்கான மூன்று நாள் விஜயம் மிகவும் வெற்றிகரமானது எனவும் இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அந்நாட்டு அரசு மற்றும் தொழில்துறையிலும், மிகுந்த உற்சாகம் உள்ளது எனவும் மத்திய வர்த்தக் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகளை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறைப்படி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















