பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட பதுளை – கொழும்பு பிரதான வீதி, ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இருப்பினும், அந்தப் பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதனிடையே வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்று (25) காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கிடையில், மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கீழ் கடுகன்னாவை வீதியை மழை பெய்யாத காலங்களில் மட்டும் ஒற்றைப் பாதையாகத் திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
வாகனப் போக்குவரத்திற்காக குறித்த வீதியை மீண்டும் திறப்பது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார தெரிவித்தார்.
இதேவளை, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக NBRO மேலும் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














