35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் வைஃபை இணைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்து, ஒரு தனியார் நிறுவனத்திடம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்ட இருவரும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
34 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டக்குளிய மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













