ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு (25) நடந்த டி:20 முத்தரப்பு தொடரின் ஐந்தாவது போட்டியில் சிம்பாப்வேயை ஒன்பது விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி வீழ்த்தியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்கவின் அதிரடியான ஆட்டமானது 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இதுவரை தோல்வியைத் தழுவியிருந்த இலங்கை அணியானது மீண்டும் ஃபோர்முக்கு திரும்பியுள்ளது.
147 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கையின் தொடக்க வீரர்களான பத்தும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிஷார ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை சேர்த்து உறுதியான அடித்தளத்தை அமைத்தனர்.
பின்னர் மிஷார 12 ஓட்டங்களுக்கு பிராட் எவன்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் பத்தும் நிஸ்ஸங்க ஒரு சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்னிங்ஸின் நிறைவில் அவர் 58 பந்துகளில் 98 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பதினொரு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசி இலங்கையை உறுதியான வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
மறுபுறம் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இலங்கை 16.2 ஓவர்களில் எளிதாக இலக்கை எட்டியது (148/1).
போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.














