சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
10 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.














